2008-12-14

கார்த்திகை விளக்குவிழா


கார்த்திகை திருவிழாவை பற்றி திரு.மறைமலையடிகள் அடிகள்

கார்த்திகைத் திங்களில் முழுமதியானது அறுமீனைச் சேர்ந்த நாளின் இராக்காலத்து நடுவிலே, ஊரில் தெருவெங்கும் விளக்குகளை வரிசை வரிசியாக ஏற்றி வைத்து, மலர்மாலைகளைத் தொங்கவிடுதல் முதலாகிய ஒப்பனைகளைச் செய்து, ஒளிவடிவினனாகிய எல்லாம் வல்ல இறைவனை வழிபடும் திருவிழாப், பண்டைக்காலம் தொட்டு இன்றை வரையில் தென்றமிழ் நாட்டிலுள்ள தமிழ் மக்களாற் கொண்டாடப்பட்டு வருகின்றது. இஃது இற்றைக்கு இரண்டாயிர ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திருந்தே தமிழ் மக்களால் மிக்க சிறப்புடன் கொண்டாடப்பட்டு வரும் பழமையுடைத்தென்பது, ஆசிரியர் நக்கீரனார் பாடிய 'அம்மவாழி தோழி' என்னும் அகநானூற்றுச் செய்யுளில் (141)

'மழைகால் நீங்கிய மாக விசும்பிற்
குறுமுயல் மறுநிறங் கிளர மதிநிறைந்து
அறுமீன் சேரும் அகலிருள் நடுநாள்
மறுகு விளக்குறுத்து மாலை தூக்கிப்
பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
விழவுடன் அயர வருகதில் லம்ம'

என இக்கார்த்திகை விளக்குவிழாக் கொண்டாடப்பட்ட செய்தி நன்கெடுத்துக் கூறப்படுதலாற் றெற்றென விளங்காநிற்கும்.

இங்ஙனம் பண்டைத் தமிழ்மக்கள் கொண்டாடிவரும் விளக்கு விழாவிலிருந்து, அவர்கள் இறைவனை ஒளிவடிவினனாக் கொண்ட கொள்கையின் மாட்சி புலனாகாநிற்கின்றது. நங்கட்புலனெதிரே விளங்கித் தோன்றும் ஞாயிறு திங்கள் தீ விண்மீன் முதலான ஒளிவடிவுகளெல்லாம் இறைவன் வடிவேயென்பது, சைவசித்தாந்த இரண்டாம் ஆசிரியரான அருணந்தி சிவனார்,

'நாயகன் கண்ந யப்பால் நாயகி புதைப்ப எங்கும்
பாயிரு ளாகி மூடப் பரிந்துல கினுக்கு நெற்றித்
தூயநேத் திரத்தி னாலே சுடரொளி கொடுத்த பண்பிற்
றேயமார் ஒளிக ளெல்லாஞ் சிவனுருத் தேச தென்னார்'

என்றருளிச் செய்த சிவஞானசித்திச் செய்யுளால் நன்கு விளங்கற்பாலதே யாம். ஒளிவடிவே கடவுள் வடிவாதலுங், கடவுள் உயிர்களின் காட்சிக்குங் கருத்துக்கும் அப்பாற்பட்டவராய் இராமல், அவர்தங் காட்சிக்குங் கருத்துக்கும் எளியராய் அவர்க்கு அணுக்கராயே நின்று அருள்புரிந்து வருதலும், இவற்றோ டினமான ஏனை நுடபங்களும் யாம் இயற்றிய மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும், சைவசித்தாந்த ஞானபோதம், முதலான நூல்களில் விரிவாயெடுத்துக் காட்டப் பட்டிருக்கின்றன.