2008-12-14

இந்திய இளைஞர்களின் அமெரிக்க வாழ்க்கை


அமெரிக்காவில், "செட்டில்' ஆன லென்ஸ் மாமாவின் பால்ய சிநேகிதர் ஒருவர் அன்று மாலை எங்களை சந்திக்க வருவதாகக் கூறி இருந்தார். மாலையில் மெரினா கடற்கரை செல்ல வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.  மாலையில் அமெரிக்க நண்பரு டன் பீச்சில் வழக்கமான இடத்தில் செட்டில் ஆனோம். மாமா தமது, "கச்சேரி'க்கு ஆயத்தம் செய்ய, நான் வெள்ளரிக்காய் வாங்கி வரச் சென்றேன். கால் கிலோ வெள்ளரிக்காய் வாங்கி, அதன் தலையை சீவி, உப்பு - காரப்பொடி கலவையை, குறுக்காக நறுக்கிய வெள்ளரிக்காயின் நடுவே தடவி வாங்கி வந்தேன்.


சிறிது நேரத்திற்குப் பிறகு, அமெரிக்காவிலிருந்து வந்தவரிடம், "பி.இ., முடித்து கம்ப்யூட்டர் பயிற்சி பெற்று தம்மைத் தயார் செய்து கொள்ளும் இளைஞர்களின் அடுத்த திட்டம் அமெ ரிக்கா செல்வதாகத்தான் இருக்கிறது. ஏராளமான கனவுகளுடன் செல்லும் இந்த இளைஞர்களின் அமெரிக்க வாழ்க்கை எப்படி உள்ளது?' எனக் கேட்டேன்.


வசதியான வாழ்க்கை, கை நிறைய பணம், கார், பங்களா என அனைத்து வசதிகளும் கிடைத்தாலும், இந்த இளைஞர்கள் எதை இழக்கிறார்கள், எவற்றைப் பெறுகிறார்கள் என்பது குறித்து அவர் கூறியது ஆச்சரியமாகவும், அதிர்ச்சியானதாகவும் இருந்தது.


"ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பி.ஈ., இறுதியாண்டு படிக்கும் இளைஞனின் திட்டம் இதுவாகத்தான் இருக்கிறது... ஒன்று, நிதியுதவி கிடைத்தால், தன் எம்.எஸ்., படிப்பை அமெரிக்காவில் படிக்க வேண்டும் அல்லது பிரபல சாப்ட்வேர் கம்பெனியில் சேர்ந்து, உலகின் அனைத்து நாடுகளுக்கும் சென்று, முடிவில் அமெரிக்காவில் பணிபுரிய வேண்டும். இதில் ஏதாவது ஒன்றை இந்த இளைஞன் பெற்று விட முடிகிறது.


"வேலை கிடைத்து அமெரிக்கா புறப்படுவதற்காக, "பான் வாயேஜ்' சொல்லும் முன் இவர்கள் கூறும் வாசகம் இதுவாகத்தான் இருக்கிறது... "ஜஸ்ட், இரண்டு அல்லது மூன்று வருடங்கள் தான் அமெரிக்க வாழ்க்கை. அதற்குள் 10 அல்லது 20 லட்சம் டாலர்களை (ஒரு டாலர் ரூ.45) சம்பாதித்து இந்தியா திரும்பி விட வேண்டும். பின்னர் இங் கேயே செட்டில் ஆக வேண்டியது தான்...'


இப்படி சொல்லியவர், செகண்ட் ரவுண்டுக்குத் தயாரானார். அவர் தொடர்ந்தார்... "இப்போது இந்திய இளைஞனின் அமெரிக்க வாழ்க்கை துவங்குகிறது. முதல் மூன்று மாதத்திற்குள் ஒரு அபார்ட்மென்ட்டில் ஜாகை. கொஞ்சம் பயத்துடன் கார் ஓட்டக் கற்றுக் கொள்கிறான். பிறகு, சிரமத்தோடு குறைந்த விலையில் ஒரு காரும் வாங்கி விடுகிறான். அமெரிக்கா போன வேகத்தில் அடிக்கடி சென்னையில் இருக்கும் குடும்பத்தினருடன் போனில் பேச்சு. டெலிபோன் பில் 500 டாலரைத் தாண்டியதும் அது கட்.


"அடுத்த சில மாதங்களில் அங்கும் நண்பர்கள் கிடைக்கின்றனர். உடனே, ஒரு ஜாலி டிரிப். இங்கு காசிக்கு செல்வதை எவ்வளவு விசேஷமாக கருதுகிறோமோ, அதைப் போல் அமெரிக்க இந்திய இளைஞ னுக்கு, "நயாகரா' ஒரு புண்ணிய ஸ்தலம். அதோடு, நியூயார்க் நகரம், வெள்ளை மாளிகை என்று ஒரு ரவுண்ட். "குளிர்காலம் துவங்கியதும், நமது கதாநாயகனின் பழைய கார் ஸ்டார்ட் ஆக அடம் பிடிக்கிறது. இதனால், கொஞ்சம் சிரமத்துடன் ஒரு புதிய கார் வாங்கி விடுகிறான்.


"சில மாதங்களில் அமெரிக்க வாழ்க்கை கொஞ்சம், "போர்' அடிக்கிறது. தனிமை வாட்டுவதால், "திருமணம் செய்து கொண் டால் என்ன?' என்ற எண்ணம் வருகிறது. உடனே, சென்னையில் உள்ள தன் குடும்பத்தாருக்கு போன்... பெண் பார்க்கச் சொல்லி. "இதற்கிடையில் கிரீன் கார்டு, கூடுதல் சம்பளத்தில் கவனம் செலுத்த வேண்டும்.


"இந்நிலையில் சென்னையில் இருந்து தகவல்... பெண், "ரெடி' என்று! குறைவான கட்டணம் எந்த விமான நிறுவனம் தருகிறது என்பதை அலசி, ஆராய்ந்து அதில் டிக்கெட் வாங்கி சென்னை விஜயம். "பையனைப் பார்த்ததும் பெற் றோருக்கு குஷி. உடனே, பெண் வீட்டுக்கு தகவல் கொடுத்து, "மாப்பிள்ளை உடனே அமெ ரிக்கா திரும்ப வேண்டும்; இன்னும் 10 நாளில் திருமணம்...' என அலட்டுவர்.


"சும்மா இருப்பார்களா பெண் வீட்டார்? அமெரிக்க மாப்பிள்ளையாச்சே! இப்போது ஒரு முக்கியமான விஷயம் - வரதட்சணை! தெலுங்கு பையன் என்றால், 15 பெண்களைப் பார்த்து தேர்வு செய்வார். ரூபாய் 50 லட்சம் பணம்; 10 ஏக்கர் விளைநிலம்; இரண்டு ரைஸ்மில்; இன்னும் சில! மற்றவர்களும் இதைபோல ஒரு நிரந்தர பட்டியல் வைத்துள்ளனர்.


"ஒரு வழியாக திருமணம் முடிகிறது. மனைவியுடன் அமெ ரிக்கா பயணம். இனி, சென்னை செல்வதென்றால் இருவருக்கும் விமான கட்டணம், உறவினர்களுக்கு பரிசுப் பொருட்கள் என ஒரு பெரும் செலவு பட்டியல் நீளுவதால் சென்னை டிரிப் முற்றிலுமாக கட்.


"இப்போது இளைஞனின் மனைவி கர்ப்பம். பிரசவம் பார்க்க அமெரிக்காவிற்கு வந்த மாமியார் புலம்புவார்... "வயதாகி விட்டது. நீங்கள் சென்னைக்கே வந்து விடுங்கள்...' என்று! ஆனால், இன்னும் மூன்று ஆண்டுகள் அமெரிக்க வாசம் செய்யலாம் என்பது நம் இளைஞனின் திட்டம். "இப்போது அவருக்கு (இளை ஞன் என்று இனி சொல்ல முடியாது; ஏனெனில், இப்போது நம் ஹீரோவுக்கு இரண்டு குழந்தைகள்.) பொறுப்பு அதிகம். தனது இரண்டு வயது பெண் குழந்தை அமெரிக்காவிலேயே இருந்தால் கெட்ட பழக்கங்கள் வந்து விடும் எனவும், மேற்கத் திய கலாச்சாரம் மகளை கெடுத்து விடும் எனவும் யோசித்து, மகளுக்கு ஐந்து வயதாகும் போது நாம் சென்னை சென்று செட்டிலாக வேண்டும் என நினைக்கிறார். "இப்படியே நான்கு ஆண்டுகள் ஓடிவிடும். ஒருநாள் சென்னையில் இருந்து அப்பா, அம்மாவிற்கு உடம்பு சரியில்லை என போன் வரும்.


"கவனிப்பார் யாரும் இல்லாத இருவரையும் பாதுகாக்க சென்னைக்கு சென்று விடலாமா என்று நம்மவருக்கு ஒரு எண்ணம். நமது தகுதிக்கு ஒரு நல்ல கம்பெனியில் வேலை கிடைக்குமா? கிடைத்தாலும், 70 ஆயிரம் டாலர் சம்பளம் இந்தியாவில் கிடைக்காது. இது தவிர, தன் மாமியாரிடம் குப்பை கொட்ட மனைவிக்கும் இஷ்டம் இல்லை. எனவே, மாற்று திட்டம் தயாராகிறது. அப்பாவையும், அம்மாவையும் கவனிக்க உறவினர்களிடம் பொறுப்பு தரப்பட்டு விட்டது...' சொல்லி முடித்தவர், மால்பரோ ஒன்றை பற்ற வைத்து, ஆதங்கமாக ஒரு இழுப்பு இழுத்து புகையை நெஞ்சில் சில வினாடி தக்க வைத்து, பின்னர் மூக்கால் அதை வெளியேற்றி, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.


தொடர்ந்தார்...


"இப்போது நமது ஆளுக்கு வயது 50. அவருக்கு இந்திய கலாச்சாரம் நினைவுக்கு வருகிறது. சென்னை கபாலீஸ்வரர் கோவிலையும், பார்த்தசாரதி கோவிலையும் நினைத்து பார்க்கிறார். சென்னையில் தான் பணிபுரிந்த லாயிட்ஸ் ரோடு அலுவலகம், அங்கிருந்த நண்பர்கள், புகாரியின் டீ, கோதுமை புரோட்டா என அனைத்தும் தற்போது அவருக்கு வேண்டும். "உடனே, ஒரு திட்டம்... சென்னையில் ஒரு பெரிய, "பிளாட்' வாங்க. நண்பர்களிடம் சொல்லி அதையும் வாங்கியாகி விட்டது. இரண்டாண்டுகளில் இந்தியா திரும்பி விடலாம் என நினைக்கிறார்.


"இப்போது அவரின் மகள் ஸ்வேதாவும், மகன் நிகிலும் கல்லூரி மாணவர்கள். ஸ்வேதா, ஸ்டீவையும், நிகில், சுசென்னையும் காதலித்து அமெரிக்காவிலேயே செட்டில் ஆக திட்டம் போடுகின்றனர். நமது ஆளுக்கு இது கொஞ்சம் கூட பிடிக்கவில்லை என்றாலும், மனைவியின் ஒப்புதலோடு அதுதான் நடந்தது. "சரி... சென்னைக்கு போய் விடுவோம்...' என மனைவியிடம் கேட்ட போது, "நான் பிள்ளைகளுக்கு ஆதரவாக இங்கேயே இருந்து விடுகிறேன்...' என பதில் கிடைத்தது, நம் ஆள் துவண்டு போகிறார்.


"தான் மட்டும் தனியாக புறப்பட்டு சென்னை வந்தாகி விட்டது. அடையாறில் வாங்கிப் போட்டிருந்த, "பிளாட்டில்' வாசம். வயது இப்போது 65. உடல்நிலை மோசமாகிறது. அருகில் இருந்த உறவினர்கள் அமெரிக்காவில் உள்ள மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் தகவல் சொல்லியும் யாரும் வரவில்லை. மனைவிக்கு பிளட் பிரஷராம். விமானப் பயணம் கூடாது என்று டாக்டர் சொல்லி விட்டாராம். பையனுக்கும் இந்தியா வர நேரமில்லையாம்.


"தான் இறந்தால் மகன் வந்துதான் கொள்ளி போட வேண்டும் என இவர் நினைக்கிறார்; ஆனால், இறுதி வரை யாரும் வரவில்லை. நமது கதாநாயகனின் கடைசி நாட்கள் சென்னை புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு முதியோர் காப்பகத்தில் நிறைவடைகிறது. இது தானப்பா நான் நேரில் கண்ட அமெரிக்க கதை...' எனக் கூறி, நீண்ட பெருமூச்சு விட்டார்.


"நீங்க இப்ப எங்கே? அமெரிக்காவிலேயா? இல்லை, முதியோர் காப்பகத்திலேயா?' எனக் கேட்டேன்.

அவர் பதில் ஒன்றும் சொல்லவில்லை; அந்த அமைதிக்கு எனக்கு அர்த்தமும் புரியவில்லை... 

(நன்றி: தினமலர் - வாரமலர் - அந்துமணி பா.கே.ப)

மருதமலை மாமணியே முருகய்யா

1972 - அக்டோபர் - 24
தயாரிப்பு: திரு. சாண்டோ M.M.A.சின்னப்பத்தேவரின் தண்டாயுதபாணி பிலிம்ஸ்
படம்: தெய்வம்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
வரிகள்: வியரசர் கண்ணதாசன்
குரல்: மதுரை சோமு


கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை?
கொங்குமணி நாட்டினிலே புனித மலை எந்த மலை?
தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை?
தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருத மலை

அ அ அ அ அ அ ஆ
அ அ அ அ அ அ ஆ
அ அ ஆ

மருத மலை
மருத மலை
முருகா

மருதமலை மாமணியே முருகய்யா (2)
தேவரின் குலம் காக்கும் வேலய்யா அய்யா

மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா அய்யா
மருதமலை மாமணியே முருகய்யா

மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
மணமிகு சந்தனம் அழகிய குங்குமம் அய்யா
உனது மனம் பெற மகிழ்ந்திடவே

மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா அய்யா
மருதமலை மாமணியே முருகய்யா

தைப்பூச நன்னாளில் தேருடன் திருநாளும் பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா
அ.அ..அ..அ..ஆ...
தைப்பூச நன்னாளில் தேருடன் திருநாளும் பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா
அ.அ..அ..அ..ஆ...
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா அய்யா
மருதமலை மாமணியே முருகய்யா.

கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
அ.அ..அ..அ..ஆ...
ஆ ஆ ஆ
அ அ அ அ அ அ அ அ அ அ அ அ ஆஆ ஆ ஆ
ஆ ஆ ஆ
அ அ அ அ அ அ
கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன் (2)
அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன்
அ.அ..அ..அ..ஆ...
அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன்
அ.அ..அ..அ..ஆ...

மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா அய்யா
மருதமலை மாமணியே முருகய்யா

சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் - நான் மறவேன்
பக்திக் கடலென பற்றி பெருகிட வருவேன் - நான் வருவேன்
சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் - நான் மறவேன்
பக்திக் கடலென பற்றி பெருகிட வருவேன் - நான் வருவேன்
பரமனின் திருமகனே
அழகிய தமிழ் மகனே
பரமனின் திருமகனே
அழகிய தமிழ் மகனே
காண்பதெல்லாம்.. உனது முகம் அது ஆறுமுகம்
காலமெல்லாம் எனது மனம் உருகுது முருகா
காண்பதெல்லாம்.. உனது முகம் அது ஆறுமுகம்
காலமெல்லாம் எனது மனம் உருகுது முருகா
அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே (2)
பனியது மழையது நதியது கடலது
சகலமும் உனதுரு கருணையில் எழுவது
பனியது மழையது நதியது கடலது
சகலமும் உனதுரு கருணையில் எழுவது
வருவாய்
குகனே
வேலய்யா
அ அ அ அ அ அ ஆ
அ அ அ அ அ அ ஆ
அ அ ஆ

தேவர் வணங்கும் மருதமலை முருகா

மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா அய்யா
மருதமலை மாமணியே முருகய்யா

==============================================

 இந்தப்பாடலின் பின்னணியில் ஒரு சுவையான நிகழ்ச்சி சொல்லப்படுகிறது. ஒருமுறை 1972ஆம் ஆண்டில் கவியரசு கண்ணதாசனின் மகளின் திருமணத்திற்கு மூன்று நாட்கள் இருக்கும்பொழுது தமக்கு வர வேண்டிய இடத்திலிருந்து பணம் வராமல் போனதினால் கவிஞர் துயருற்றிருந்தாராம். கவிஞரின் இஷ்ட தெய்வம் கண்ணன். அவ்வமயம் தேவரின் ' தெய்வம் ' படத்திற்கு பாடல் எழுதக் கடமையே கண்ணாக கவிஞர் தன் உதவியாளரிடம் இப்பாடலின் வரிகளைச் சொல்லிக்கொண்டிருந்த பொழுது அடுத்த அறையிலிருந்த தேவர் விரைந்து வந்து அந்த வரிகளை மீண்டும் ஒரு முறை திருப்பிச் சொல்லுமாறு கேட்டு அப்பாடல் தமக்கென்றே எழுதப்பட்டதாக எண்ணி மகிழ்ந்து உடனே ஒரு லக்ஷ ரூபாய்கள் கவிஞருக்கு அளித்தது மட்டுமின்றி தமக்குரிய திருமண மண்டபத்தில கவிஞரின் மகளின் திருமணத்தை நடத்தச் செய்தாராம். அந்த ' காலத்தால் செய்த உதவி ' கவியரசிற்கு ' ஞாலத்தில் மாணப் பெரிதாக' க் கண்டதில் வியப்பதற்கேதுமில்லை.

தேவரின் திரைப்பட அரங்கில் கவியரசரும், வித்தகரும் ஒரு நட்போடு கூடிய வாக்கு வாதத்தில் தத்தம் திறமையை நிலை நிறுத்தும் சவாலில் ஈடுபட்டிருந்தபொழுது குன்னக்குடி தம் நண்பரின் திறமைக்குச் சவாலாகக் கடினமான சங்கதிகளுடன் கூடிய விரைவு ஸ்வரங்களை அமைத்து வாசித்த பல்லவி அனுபல்லவி சரணத்திற்கு சற்றும் சளைக்காது சாஹித்யத்தை உடனுக்குடன் எழுதி நண்பர்கள் ஆறத் தழுவிக் கொண்டனராம்.

==============================================

மயக்கமா கலக்கமா

படம்: சுமைதாங்கி
வருடம்: 1960
குரல்: PB ஸ்ரீநிவாஸ்
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி

மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எது வந்தாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்

(மயக்கமா)
ஏழை மனதை மாளிகையக்கி
இரவும் பகலும் காவியம் பாடி
நாளைப் பொழுதை இறைவனுக்களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு

(மயக்கமா)

அமுதும் தேனும் எதற்கு

-----------------------------------------------------------------------
பாடல் - அமுதும் தேனும் எதற்கு
படம் - தை பிறந்தால் வழி பிறக்கும்
இசை - கே.வி.மகாதேவன்
பாடகர் - சீர்காழி கோவிந்தராசன்
வரிகள் - சுரதா
இராகம் - மோகனம்
-----------------------------------------------------------------------
அமுதும் தேனும் எதற்கு- நீ
அருகினில் இருக்கையிலே எனக்கு -அமுதும்

அருவி தரும் குளிர் நீர் அன்பே இனிமேல்
அதுவும் சுடு நீர் ஆகும் நமக்கு
அதுவும் சுடு நீர் ஆகும் நமக்கு

நிலவின் நிழலோ உன் வதனம் புது
நிலைக்கண்ணாடியோ மின்னும் கன்னம்
மலையில் பிறவா மாமணியே நான்
கொய்யும் கொய்யாக் கனியே வான் -அமுதும்

விழியாலே காதல் கதை பேசு மலர்க்
கையாலே சந்தனம் பூசு- தமிழ்
மொழி போலே சுவையூட்டும் செந்தேனே
உடல் நான் உயிர் நீ தானே வான் -அமுதும்
-----------------------------------------------------------------------

Song: Amudhum Thenum
Film: thai piranthaal vazhi piRakkum
Music Director: KVM
Singer: Seerkhazhi Govindarajan
Lyricst: Suradha
Raga: Mohanam
-----------------------------------------------------------------------

Amudhum Thenum Etharku-Nee
Aruginil Irukkayile Enakku

Aruvi Tharum Kulir Neer Anbey Inimel
Athuvum Sudu Neer Aagum Namakku
Athuvum Sudu Neer aagum Namakku

(Amudhum Thenum Etharku)

Nilavin Nizhalo Un Vathanam
Puthu Nilai Kannadiyo Minnum Kannam
Malayil Piravaa Maamaniye Naan
Koyium  Koiyaa Kaniye - Vaan

(Amudhum Thenum Etharku)

Vizhiyale kaathal Kathai Pesu
Malar Kaiyale Santhanam Poosu
Thamizh Mozhi Pole Suvaiyoottum Senthene
Udal Naan Uyir Nee Thaane - Vaan

(Amudhum Thenum Etharku)
-----------------------------------------------------------------------

கார்த்திகை விளக்குவிழா


கார்த்திகை திருவிழாவை பற்றி திரு.மறைமலையடிகள் அடிகள்

கார்த்திகைத் திங்களில் முழுமதியானது அறுமீனைச் சேர்ந்த நாளின் இராக்காலத்து நடுவிலே, ஊரில் தெருவெங்கும் விளக்குகளை வரிசை வரிசியாக ஏற்றி வைத்து, மலர்மாலைகளைத் தொங்கவிடுதல் முதலாகிய ஒப்பனைகளைச் செய்து, ஒளிவடிவினனாகிய எல்லாம் வல்ல இறைவனை வழிபடும் திருவிழாப், பண்டைக்காலம் தொட்டு இன்றை வரையில் தென்றமிழ் நாட்டிலுள்ள தமிழ் மக்களாற் கொண்டாடப்பட்டு வருகின்றது. இஃது இற்றைக்கு இரண்டாயிர ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திருந்தே தமிழ் மக்களால் மிக்க சிறப்புடன் கொண்டாடப்பட்டு வரும் பழமையுடைத்தென்பது, ஆசிரியர் நக்கீரனார் பாடிய 'அம்மவாழி தோழி' என்னும் அகநானூற்றுச் செய்யுளில் (141)

'மழைகால் நீங்கிய மாக விசும்பிற்
குறுமுயல் மறுநிறங் கிளர மதிநிறைந்து
அறுமீன் சேரும் அகலிருள் நடுநாள்
மறுகு விளக்குறுத்து மாலை தூக்கிப்
பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
விழவுடன் அயர வருகதில் லம்ம'

என இக்கார்த்திகை விளக்குவிழாக் கொண்டாடப்பட்ட செய்தி நன்கெடுத்துக் கூறப்படுதலாற் றெற்றென விளங்காநிற்கும்.

இங்ஙனம் பண்டைத் தமிழ்மக்கள் கொண்டாடிவரும் விளக்கு விழாவிலிருந்து, அவர்கள் இறைவனை ஒளிவடிவினனாக் கொண்ட கொள்கையின் மாட்சி புலனாகாநிற்கின்றது. நங்கட்புலனெதிரே விளங்கித் தோன்றும் ஞாயிறு திங்கள் தீ விண்மீன் முதலான ஒளிவடிவுகளெல்லாம் இறைவன் வடிவேயென்பது, சைவசித்தாந்த இரண்டாம் ஆசிரியரான அருணந்தி சிவனார்,

'நாயகன் கண்ந யப்பால் நாயகி புதைப்ப எங்கும்
பாயிரு ளாகி மூடப் பரிந்துல கினுக்கு நெற்றித்
தூயநேத் திரத்தி னாலே சுடரொளி கொடுத்த பண்பிற்
றேயமார் ஒளிக ளெல்லாஞ் சிவனுருத் தேச தென்னார்'

என்றருளிச் செய்த சிவஞானசித்திச் செய்யுளால் நன்கு விளங்கற்பாலதே யாம். ஒளிவடிவே கடவுள் வடிவாதலுங், கடவுள் உயிர்களின் காட்சிக்குங் கருத்துக்கும் அப்பாற்பட்டவராய் இராமல், அவர்தங் காட்சிக்குங் கருத்துக்கும் எளியராய் அவர்க்கு அணுக்கராயே நின்று அருள்புரிந்து வருதலும், இவற்றோ டினமான ஏனை நுடபங்களும் யாம் இயற்றிய மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும், சைவசித்தாந்த ஞானபோதம், முதலான நூல்களில் விரிவாயெடுத்துக் காட்டப் பட்டிருக்கின்றன.