2008-12-14

இந்திய இளைஞர்களின் அமெரிக்க வாழ்க்கை


அமெரிக்காவில், "செட்டில்' ஆன லென்ஸ் மாமாவின் பால்ய சிநேகிதர் ஒருவர் அன்று மாலை எங்களை சந்திக்க வருவதாகக் கூறி இருந்தார். மாலையில் மெரினா கடற்கரை செல்ல வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.  மாலையில் அமெரிக்க நண்பரு டன் பீச்சில் வழக்கமான இடத்தில் செட்டில் ஆனோம். மாமா தமது, "கச்சேரி'க்கு ஆயத்தம் செய்ய, நான் வெள்ளரிக்காய் வாங்கி வரச் சென்றேன். கால் கிலோ வெள்ளரிக்காய் வாங்கி, அதன் தலையை சீவி, உப்பு - காரப்பொடி கலவையை, குறுக்காக நறுக்கிய வெள்ளரிக்காயின் நடுவே தடவி வாங்கி வந்தேன்.


சிறிது நேரத்திற்குப் பிறகு, அமெரிக்காவிலிருந்து வந்தவரிடம், "பி.இ., முடித்து கம்ப்யூட்டர் பயிற்சி பெற்று தம்மைத் தயார் செய்து கொள்ளும் இளைஞர்களின் அடுத்த திட்டம் அமெ ரிக்கா செல்வதாகத்தான் இருக்கிறது. ஏராளமான கனவுகளுடன் செல்லும் இந்த இளைஞர்களின் அமெரிக்க வாழ்க்கை எப்படி உள்ளது?' எனக் கேட்டேன்.


வசதியான வாழ்க்கை, கை நிறைய பணம், கார், பங்களா என அனைத்து வசதிகளும் கிடைத்தாலும், இந்த இளைஞர்கள் எதை இழக்கிறார்கள், எவற்றைப் பெறுகிறார்கள் என்பது குறித்து அவர் கூறியது ஆச்சரியமாகவும், அதிர்ச்சியானதாகவும் இருந்தது.


"ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பி.ஈ., இறுதியாண்டு படிக்கும் இளைஞனின் திட்டம் இதுவாகத்தான் இருக்கிறது... ஒன்று, நிதியுதவி கிடைத்தால், தன் எம்.எஸ்., படிப்பை அமெரிக்காவில் படிக்க வேண்டும் அல்லது பிரபல சாப்ட்வேர் கம்பெனியில் சேர்ந்து, உலகின் அனைத்து நாடுகளுக்கும் சென்று, முடிவில் அமெரிக்காவில் பணிபுரிய வேண்டும். இதில் ஏதாவது ஒன்றை இந்த இளைஞன் பெற்று விட முடிகிறது.


"வேலை கிடைத்து அமெரிக்கா புறப்படுவதற்காக, "பான் வாயேஜ்' சொல்லும் முன் இவர்கள் கூறும் வாசகம் இதுவாகத்தான் இருக்கிறது... "ஜஸ்ட், இரண்டு அல்லது மூன்று வருடங்கள் தான் அமெரிக்க வாழ்க்கை. அதற்குள் 10 அல்லது 20 லட்சம் டாலர்களை (ஒரு டாலர் ரூ.45) சம்பாதித்து இந்தியா திரும்பி விட வேண்டும். பின்னர் இங் கேயே செட்டில் ஆக வேண்டியது தான்...'


இப்படி சொல்லியவர், செகண்ட் ரவுண்டுக்குத் தயாரானார். அவர் தொடர்ந்தார்... "இப்போது இந்திய இளைஞனின் அமெரிக்க வாழ்க்கை துவங்குகிறது. முதல் மூன்று மாதத்திற்குள் ஒரு அபார்ட்மென்ட்டில் ஜாகை. கொஞ்சம் பயத்துடன் கார் ஓட்டக் கற்றுக் கொள்கிறான். பிறகு, சிரமத்தோடு குறைந்த விலையில் ஒரு காரும் வாங்கி விடுகிறான். அமெரிக்கா போன வேகத்தில் அடிக்கடி சென்னையில் இருக்கும் குடும்பத்தினருடன் போனில் பேச்சு. டெலிபோன் பில் 500 டாலரைத் தாண்டியதும் அது கட்.


"அடுத்த சில மாதங்களில் அங்கும் நண்பர்கள் கிடைக்கின்றனர். உடனே, ஒரு ஜாலி டிரிப். இங்கு காசிக்கு செல்வதை எவ்வளவு விசேஷமாக கருதுகிறோமோ, அதைப் போல் அமெரிக்க இந்திய இளைஞ னுக்கு, "நயாகரா' ஒரு புண்ணிய ஸ்தலம். அதோடு, நியூயார்க் நகரம், வெள்ளை மாளிகை என்று ஒரு ரவுண்ட். "குளிர்காலம் துவங்கியதும், நமது கதாநாயகனின் பழைய கார் ஸ்டார்ட் ஆக அடம் பிடிக்கிறது. இதனால், கொஞ்சம் சிரமத்துடன் ஒரு புதிய கார் வாங்கி விடுகிறான்.


"சில மாதங்களில் அமெரிக்க வாழ்க்கை கொஞ்சம், "போர்' அடிக்கிறது. தனிமை வாட்டுவதால், "திருமணம் செய்து கொண் டால் என்ன?' என்ற எண்ணம் வருகிறது. உடனே, சென்னையில் உள்ள தன் குடும்பத்தாருக்கு போன்... பெண் பார்க்கச் சொல்லி. "இதற்கிடையில் கிரீன் கார்டு, கூடுதல் சம்பளத்தில் கவனம் செலுத்த வேண்டும்.


"இந்நிலையில் சென்னையில் இருந்து தகவல்... பெண், "ரெடி' என்று! குறைவான கட்டணம் எந்த விமான நிறுவனம் தருகிறது என்பதை அலசி, ஆராய்ந்து அதில் டிக்கெட் வாங்கி சென்னை விஜயம். "பையனைப் பார்த்ததும் பெற் றோருக்கு குஷி. உடனே, பெண் வீட்டுக்கு தகவல் கொடுத்து, "மாப்பிள்ளை உடனே அமெ ரிக்கா திரும்ப வேண்டும்; இன்னும் 10 நாளில் திருமணம்...' என அலட்டுவர்.


"சும்மா இருப்பார்களா பெண் வீட்டார்? அமெரிக்க மாப்பிள்ளையாச்சே! இப்போது ஒரு முக்கியமான விஷயம் - வரதட்சணை! தெலுங்கு பையன் என்றால், 15 பெண்களைப் பார்த்து தேர்வு செய்வார். ரூபாய் 50 லட்சம் பணம்; 10 ஏக்கர் விளைநிலம்; இரண்டு ரைஸ்மில்; இன்னும் சில! மற்றவர்களும் இதைபோல ஒரு நிரந்தர பட்டியல் வைத்துள்ளனர்.


"ஒரு வழியாக திருமணம் முடிகிறது. மனைவியுடன் அமெ ரிக்கா பயணம். இனி, சென்னை செல்வதென்றால் இருவருக்கும் விமான கட்டணம், உறவினர்களுக்கு பரிசுப் பொருட்கள் என ஒரு பெரும் செலவு பட்டியல் நீளுவதால் சென்னை டிரிப் முற்றிலுமாக கட்.


"இப்போது இளைஞனின் மனைவி கர்ப்பம். பிரசவம் பார்க்க அமெரிக்காவிற்கு வந்த மாமியார் புலம்புவார்... "வயதாகி விட்டது. நீங்கள் சென்னைக்கே வந்து விடுங்கள்...' என்று! ஆனால், இன்னும் மூன்று ஆண்டுகள் அமெரிக்க வாசம் செய்யலாம் என்பது நம் இளைஞனின் திட்டம். "இப்போது அவருக்கு (இளை ஞன் என்று இனி சொல்ல முடியாது; ஏனெனில், இப்போது நம் ஹீரோவுக்கு இரண்டு குழந்தைகள்.) பொறுப்பு அதிகம். தனது இரண்டு வயது பெண் குழந்தை அமெரிக்காவிலேயே இருந்தால் கெட்ட பழக்கங்கள் வந்து விடும் எனவும், மேற்கத் திய கலாச்சாரம் மகளை கெடுத்து விடும் எனவும் யோசித்து, மகளுக்கு ஐந்து வயதாகும் போது நாம் சென்னை சென்று செட்டிலாக வேண்டும் என நினைக்கிறார். "இப்படியே நான்கு ஆண்டுகள் ஓடிவிடும். ஒருநாள் சென்னையில் இருந்து அப்பா, அம்மாவிற்கு உடம்பு சரியில்லை என போன் வரும்.


"கவனிப்பார் யாரும் இல்லாத இருவரையும் பாதுகாக்க சென்னைக்கு சென்று விடலாமா என்று நம்மவருக்கு ஒரு எண்ணம். நமது தகுதிக்கு ஒரு நல்ல கம்பெனியில் வேலை கிடைக்குமா? கிடைத்தாலும், 70 ஆயிரம் டாலர் சம்பளம் இந்தியாவில் கிடைக்காது. இது தவிர, தன் மாமியாரிடம் குப்பை கொட்ட மனைவிக்கும் இஷ்டம் இல்லை. எனவே, மாற்று திட்டம் தயாராகிறது. அப்பாவையும், அம்மாவையும் கவனிக்க உறவினர்களிடம் பொறுப்பு தரப்பட்டு விட்டது...' சொல்லி முடித்தவர், மால்பரோ ஒன்றை பற்ற வைத்து, ஆதங்கமாக ஒரு இழுப்பு இழுத்து புகையை நெஞ்சில் சில வினாடி தக்க வைத்து, பின்னர் மூக்கால் அதை வெளியேற்றி, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.


தொடர்ந்தார்...


"இப்போது நமது ஆளுக்கு வயது 50. அவருக்கு இந்திய கலாச்சாரம் நினைவுக்கு வருகிறது. சென்னை கபாலீஸ்வரர் கோவிலையும், பார்த்தசாரதி கோவிலையும் நினைத்து பார்க்கிறார். சென்னையில் தான் பணிபுரிந்த லாயிட்ஸ் ரோடு அலுவலகம், அங்கிருந்த நண்பர்கள், புகாரியின் டீ, கோதுமை புரோட்டா என அனைத்தும் தற்போது அவருக்கு வேண்டும். "உடனே, ஒரு திட்டம்... சென்னையில் ஒரு பெரிய, "பிளாட்' வாங்க. நண்பர்களிடம் சொல்லி அதையும் வாங்கியாகி விட்டது. இரண்டாண்டுகளில் இந்தியா திரும்பி விடலாம் என நினைக்கிறார்.


"இப்போது அவரின் மகள் ஸ்வேதாவும், மகன் நிகிலும் கல்லூரி மாணவர்கள். ஸ்வேதா, ஸ்டீவையும், நிகில், சுசென்னையும் காதலித்து அமெரிக்காவிலேயே செட்டில் ஆக திட்டம் போடுகின்றனர். நமது ஆளுக்கு இது கொஞ்சம் கூட பிடிக்கவில்லை என்றாலும், மனைவியின் ஒப்புதலோடு அதுதான் நடந்தது. "சரி... சென்னைக்கு போய் விடுவோம்...' என மனைவியிடம் கேட்ட போது, "நான் பிள்ளைகளுக்கு ஆதரவாக இங்கேயே இருந்து விடுகிறேன்...' என பதில் கிடைத்தது, நம் ஆள் துவண்டு போகிறார்.


"தான் மட்டும் தனியாக புறப்பட்டு சென்னை வந்தாகி விட்டது. அடையாறில் வாங்கிப் போட்டிருந்த, "பிளாட்டில்' வாசம். வயது இப்போது 65. உடல்நிலை மோசமாகிறது. அருகில் இருந்த உறவினர்கள் அமெரிக்காவில் உள்ள மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் தகவல் சொல்லியும் யாரும் வரவில்லை. மனைவிக்கு பிளட் பிரஷராம். விமானப் பயணம் கூடாது என்று டாக்டர் சொல்லி விட்டாராம். பையனுக்கும் இந்தியா வர நேரமில்லையாம்.


"தான் இறந்தால் மகன் வந்துதான் கொள்ளி போட வேண்டும் என இவர் நினைக்கிறார்; ஆனால், இறுதி வரை யாரும் வரவில்லை. நமது கதாநாயகனின் கடைசி நாட்கள் சென்னை புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு முதியோர் காப்பகத்தில் நிறைவடைகிறது. இது தானப்பா நான் நேரில் கண்ட அமெரிக்க கதை...' எனக் கூறி, நீண்ட பெருமூச்சு விட்டார்.


"நீங்க இப்ப எங்கே? அமெரிக்காவிலேயா? இல்லை, முதியோர் காப்பகத்திலேயா?' எனக் கேட்டேன்.

அவர் பதில் ஒன்றும் சொல்லவில்லை; அந்த அமைதிக்கு எனக்கு அர்த்தமும் புரியவில்லை... 

(நன்றி: தினமலர் - வாரமலர் - அந்துமணி பா.கே.ப)