2008-10-22

தீபாவலி பண்டிகையின் உண்மை என்ன?

அனைவர்க்கும் இனிய தீபாவலி நல்வாழ்த்துக்கள்...



தீபாவலி எதற்காக கொண்டாடுகின்றோம் என்பதற்கு பெரும்பாலோரின் பதில் கண்ணன் நரகாசுரனை கொன்ற தினம் மற்றும் தீபத்தை வைத்து கடவுளை வழிபடும் தினம் என்பதாகவே இருக்கும். அதுவே நீங்கள் தீபாவலியை எவ்வாறு வழிபடுவீர்கள் என்பதற்கு பதில் இவைகளின் கலவையாகத்தாம் இருக்கும்:

1. பலகாரம் மற்றும் இனிப்பு பண்டங்கள்.
2. புது படம்.
3. மாப்பிள்ளையாக இருந்தால் தலை தீபாவலி. மற்றவர்களுக்கு தல (ஏகன்) திபாவலி.
4. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்.
6. பட்டாசு வெடிகள்.
7. புத்தாடை.
8. நோன்பு

தீபாவலி என்கிற பேரில் நாம் செய்கின்ற காரியங்கள் சரியானதுதானா? மிக முக்கியமாக அந்த தொ(ல்)லைக்காட்சி மற்றும் பட்டாசு இவற்றிலியே நமது முழு நேரமும் தீபாவலி அன்று வீணாகும். திண்பண்டங்களை தின்றும் தொலைக்காட்சியை பார்த்தும் பட்டாசுகளை வெடித்தும் நமது உடம்பையும் மனதையும் சுற்றுப்றத்தையும் பாதிக்கும் செயல்களாகவே இவை அமைகின்றன.

பின்பு, தீபாவலியை எப்ப்டி கொண்டடுவது? தீபாவலி பண்டிகையின் உண்மையான காரணம் என்ன? தீபாவலி உண்மையிலேயே தமிழர் பண்டிகைதானா?

இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் தருவதே இந்த பதிவின் நோக்கமாகும். இதற்கு சரியான விளக்கத்தினை தமிழ் அறிஞர் திரு. மறைமலை அடிகள் அவர்களின் தீபாவலி ஆராய்ச்சியின் கருவினை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்:

"தென் தமிழ் நாட்டுமக்கள் கார்த்திகைத் திங்கள் முழுமதி இரவிலே விளக்குகளை வரிசை வரிசையாக வைத்து அவற்றின் ஒளிவடிவிலே எல்லாம்வல்ல முழுமுதற் கடவுளைக் கண்ணாரக் கண்டு வணங்கி வருதல்போலவே, வடநாட்டில் அக்காலத்திருந்த தமிழ் மேன்மக்களும் ஐப்பசித் திங்களில் விளக்குவரிசை வைத்து அவற்றின் ஒளியிலே விளங்காநின்ற முழுமுதற் கடவுளுக்குத் திருவிழாக் கொண்டாடி வந்தனர். அதுதான் தீபாவலி என வழங்கிவருகின்றது. வடநாட்டவர் தென்னாட்டிற் குடியேறியபின் தீபாவலித் திருநாள் இங்குள்ள தமிழரது கொள்கைக்கும் ஏற்றதாயிருத்தலின், அஃதிங்குள்ள தமிழ் மக்களாலும் கொண்டாடப்பட்டு வருவதாயிற்று. கண்ணன் நரகாசுரனை கொன்றநாளின் நினைவுக்குறியாகத் தீபாவலித் திருநாள் கொண்டாடப்படுவதாயிற்று என்னும் கதை பிற்காலத்திற் பார்ப்பனர் கட்டிவிட்ட தொன்றாகும். பார்ப்பனர் தமது உயிர்க்கொலை வேள்விக்கு உடம்படாத நரகாசுரன் என்னும் தமிழ் மன்னன் ஒருவனைத், தமது உயிர்க்கொலை வேள்விக்கு உடம்பட்டுத் தமக்குத், துணையாயிருந்த மற்றொரு தமிழ் மன்னனாகிய கண்ணனை ஏவிக் கொலை செய்தனர். இந்நிகழ்ச்சியை, இதற்கு முன்னமே தோன்றி நடைபெற்றுவந்த தீபாவலித் திருநாளில் இயைத்து, அத்திருநாளின் உயர்ந்த கருத்தை மாற்றி விட்டதெல்லாம் பார்ப்பனர் செய்த சூழ்ச்சிச் செயலாகும். தீபாவலி என்னும் சொற்றொடர்ப் பொருளை ஆயுங்கால் அத்திருநாளுக்கும், கண்ணன் நரகாசுரனை கொன்ற நிகழ்ச்சிக்கும் ஏதோர் இயைபும் இல்லாமை தெளியப்படும். தீபாவலி என்பது தீப ஆவலி எனப் பிரிந்து விளக்கு வரிசை என்றே பொருள்தரும். விளக்குவரிசை வைத்து அதன்கண்ணே இறைவனை வழிபடும் கார்த்திகை விளக்கு விழாவுக்கும் தீபாவலி விழாவுக்கும் வேற்றுமை சிறிதுமே இல்லை. ஆதலால், தீபாவலித் திருநாளுக்குப் பார்ப்பனர் பிற்காலத்தே ஏற்றி வைத்த பொருந்தாக் கதையை மறந்து, அஃது இறைவனை ஒளிவடிவில் வழிபடும் திருநாளாதலைத் தமிழ்மக்களனைவரும் நினைவு கூர்வார்களாக!

திருமைலாப்பூரில் அறுபத்துமூன்று நாயன்மாரை நினைவு கூர்ந்து வணங்கும் பொருட்டு நடத்தும், அறுபத்துமூவர் திருவிழாவின் உண்மையறியாக் கீழ்மக்கள் "ஒளவையார் அறுபத்து மூன்று பிள்ளைகள் பெற்றும் போதாமல் பின்னும் ஒரு பிள்ளைப் பேற்றிற்கு வரம் கேட்கும் நிகழ்ச்சியாகக்" கூறும் கதைக்கும், தீபாவலித் திருநாள் நரகாசுரன் இறந்ததை நினைவு கூறும் நிகழ்ச்சியாகக் கூறும் கதைக்கும் வேறுபாடு சிறிதும் இல்லை. ஆதலால் தீபாவலி, நரகாசுரன் கதைக்குச் சிறிதும் இசைவதன்றாய்க், கார்த்திகைத் திருநாளேபோல், எல்லாம் வல்ல சிவபிரானை ஒளிவடிவில் வைத்து வழிபடும் திருநாளே ஆகுமென்று மேன்மக்களனைவரும் கடைப்பிடித்துணர்ந்து, அவ்விரண்டிலும் இறைவனையே வணங்கி உய்வார்களாக!"

இவ்வாறு தீபாவலி திருநாளுக்கும் தமிழ் மக்களுக்கும் உள்ள தொடர்பை மறைமலை அடிகளார் விளக்குகிறார். இதனால், தீபாவலி என்பது தமிழ் திருவிழாவே என்றும் அஃது கார்த்திகை திருநாளின் ஒரு திரிபே எனவும் உணர்ந்து இத்தீபாவலியன்று எல்லாம் வல்ல பரம்பொருளான சிவபெருபானை ஒளி வடிவில் சிந்தித்து இருப்போமாக!