2010-12-31

மன்மதன் திரைவிமர்சனம்

மன்மதன்அம்புவின் படம் பெயர்க்காரணம் படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே தெரிந்துவிடுகிறது. படம் ஓ.கே ரகம். அன்பே சிவம் மற்றும் பஞ்சதந்திரம் படத்துடன் பார்க்கும்போது, இந்த படம் எதிர்பார்ப்பைவிட குறைவாகவே இருக்கிறது. இடைவேளை முடியும் வரை ஒழுங்காக சென்று கொண்டு இருந்த திரைப்படம், அதன் பிறகு திரைக்கதையில் சருக்கி விழுகிறது. இடைவேளைக்கு முன், பின் என்று தனித்தனியாக பார்த்தால், படம் நன்றாக இருக்கிறது, ஆனால் இரண்டையும் இணைக்கும்போது, திரைக்கதையும் கதையும் ஒட்ட மறுக்கிறது.

கமல் அவருடைய நடிப்பு பெரிதாக பாதிக்கும்படி இல்லை. மாதவனும், சங்கீதாவும் இருப்பதால் என்னவோ அவர் கொஞ்சம் விட்டுக்கொடுத்து விட்டார் போலும். திரிஷா மிகவும் அழகாக இருக்கிறார். மேக்கப் மற்றும் கேமரா மேனுக்கு பாராட்டுக்கள். இவரே தன் சொந்த குரலில் பேசியிருப்பதற்காகவே இவருக்கு சபாஷ். படத்தின் கதாநாயகன் மாதவன் என்பதை படம் பார்த்த அனைவரும் ஒப்புக்கொள்வர் என்று நம்புகிறேன். மாதவன் அருமையாக நடித்திறுக்கிறார். அது எப்படி கமலுடன் நடிக்கும்போது மட்டும் மனுஷன் நடிப்பில் பின்னுகிறார். படத்தில் இடைவேளைக்கு பிறகு வரும் காமெடி, மும்பை எக்ஸ்பிரஸ், காதலா
காதலாவை நினைவுப்படுத்துகிறது. இந்த மாதிரி காமெடி கமல் ரசிகனுக்கு புதிதில்லை, இருந்தாலும் அருமையாக இருக்கிறது. இதை கிரேஸிமோகனிடம் கொடுத்து இருந்தால் இன்னும் அருமையாக வந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

இடைவெளிக்கு பிறகு வரும் காமெடியை தவிர படத்தில் எதுவும் சரியில்லை. பெரிய தொழிலதிபர், ஒரு புகழ்ப்பெற்ற நடிகையை மணந்து கொள்ளப்போகிறவர், அவர் மீதுள்ள சந்தேகத்தை ஒரு உளவாளியின் மூலம் தெரிந்து கொள்கிறார். இது வரை சரி, ஆனால், இதன் பிறகு அந்த தொழிலதிபர் அந்த உளவாளிக்கு பணம் தர மறுப்பது பெரிய லாஜிக் சொதப்பல். வேறு ஏதாவது காரணத்தை முயற்சி செய்து இருக்கலாம். கமல் திரிஷாவுக்கு ஜோடியில்லை என்றதும் ஆச்சரியமாக இருந்தது. பிறகு திரிஷா கமல் மேல் உள்ள பரிதாபத்தால்தான் அவரை ஏக்கத்துடன் பார்க்கிறார் என்று நினைத்தால், திடீரென்று இருவருக்கும் காதல் என்றவுடன், படத்தில் எல்லோரும் சேர்ந்து குழம்புவதை போன்று நாமும் குழம்புகிறோம். காதலில் அழுத்தம் இல்லை. கமலின் பின்னனி நன்றாக இருந்தாலும், அதையும் ரிவர்சில் காண்பித்து எந்த தாக்கமும் இல்லாமல் செய்து விட்டனர்.

படம் முடிந்த பின்னரே இன்னாருக்கு இன்னார்தான் ஜோடி என்று தெளிவாகிறது. மாதவனுக்கு மூளையே வேளை செய்யக்கூடாது என்பதற்காக இடைவேளைக்கு முன்னரே மனிதனுக்கு தண்ணீர் ஊற்றி கடைசி வரை மனுஷனை தண்ணியிலேயே வைத்திருப்பது கொஞ்சம் ஓவர்.

திமிர்தான் நல்லவங்களுக்கு பாதுகாப்பு என்கின்ற வசனங்களில் கமல் தெரிகிறார். மேலும் வீரத்தின் உச்சமே மன்னிப்புதான் என்கிற வசனுமும் சூப்பர். கமல் அவரின் மனைவியை கொலை செய்தவர்களை மன்னிக்க கூறும் காரணம் (வசனம்) சூப்பர். சங்கீதா கொஞ்சம் ஓவர் ஆக்டிங் செய்து இருப்பதாக நினைக்கிறேன். படம் நல்ல ஒரு பொழுதுபோக்கு படம். தமிழில் வெளிவரும் மற்ற படங்களை ஒப்பிடும்போது எவ்வளவோ தேவலாம். இந்த மாதிரியான முயற்சிக்காக தமிழ் சினிமா கமலுக்கு என்றென்றும் நன்றி கடன் பட்டிருக்கிறது. கமல் சார், தயவுசெய்து இந்த மாதிரி முயற்சிகளை தொடர்ந்து செய்ய வேண்டும். லாஜிக்கிலும் திரைக்கதையிலும் சொதப்பல் இருந்தாலும், கமலின் வசனம், மாதவனின் நடிப்பு, மற்றும் காமெடிக்காக படத்தை மிஸ் பண்ணாமல் கண்டிப்பாக பார்க்கலாம்.